
ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, பிரபல கராத்தே பயிற்சியாளரும், வில்வித்தை நிபுணருமான ஷிஹான் ஹுசைனி சென்னை காலமானார்.
மதுரையைச் சேர்ந்த ஷிஹான் ஹுசைனி கராத்தே பயிற்சியாளராவார். இயக்குநர் கே. பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையுலகில் அறிமுகமான ஹுசைனி வேலைக்காரன், உன்னை சொல்லிக் குற்றமில்லை, வேடன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
விஜயின் `பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் பயிற்சியாளராகவும் நடித்திருந்தார். மேலும், தமிழகத்தில் நவீன வில்வித்தையின் முன்னொடியாகத் திகழ்ந்தார் ஹுசைனி. தமிழ்நாட்டில் வில்வித்தை அமைப்பை நிறுவி அதன் பொதுச்செயலாளராகப் பணியாற்றி, நூற்றுக்கணக்கான வில்வித்தை வீரர்களை அவர் உருவாக்கியுள்ளார்.
இதற்கிடையே, ஹுசைனிக்கு இரத்தப் புற்றுநோய் மற்றும் அப்லாஸ்டிக் அனீமியா இருப்பது அண்மையில் உறுதிசெய்யப்பட்டு, அதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று வந்த நிலையிலும்கூட, `மீண்டு வருவேன்’ என்று அவர் காணொளி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஷிஹான் ஹுசைனி இன்று (மார்ச் 25) அதிகாலை உயிரிழந்ததாக அவரது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது.
இறப்புக்குப் பிறகு, மருத்துவம் சார்ந்த உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக தன் உடலை தானம் செய்ய முடிவுசெய்துள்ளதாகவும், இதயத்தை மட்டும் பாதுகாப்பதற்காக, தனது வில்வித்தை - கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்குமாறும் சிகிச்சையில் இருந்தபோது ஹுசைனி அறிவித்திருந்தார். அதன்படி அவரது உடல் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தானமாக வழங்கப்படுகிறது.
இதை ஒட்டி, இன்று (மார்ச் 25) மாலை 4 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமீருன்நிசா இடுகாட்டில் வைத்து அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹுசைனியின் மறைவுக்கு தமிழக அரசியல் பிரபலங்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.