
சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசுகளிடம் இருந்து இனி தடையில்லா சான்று பெறுவது கட்டாயமல்ல என்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது சிபிஎஸ்இ வாரியம்.
புதிதாகத் தொடங்கப்படும் சிபிஎஸ்இ பள்ளிகள், சிபிஎஸ்இ பாடத்திட்டம் வழியாக வகுப்புகளை தொடங்குவதற்கு முன்பு சிபிஎஸ்இ வாரியத்திடம் இருந்து இணைப்பு அங்கீகாரம் பெறவேண்டும். அப்படி இணைப்பு அங்கீகாரம் பெறவதற்கு முன்பு சம்மந்தப்பட்ட மாநில அரசுகளிடம் தடையில்லா சான்று (no objection certificate) பெறுவது கட்டாயமாகும்.
இந்நிலையில், 2026-27 கல்வியாண்டு முதல் புதிதாகத் தொடங்கப்படும் பள்ளிகள் சிபிஎஸ்இ வாரியத்திடம் அமைப்பிடம் இருந்து இணைப்பு அங்கீகாரம் பெற, சம்மந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயமில்லை என்று சிபிஎஸ்இ அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிக்கையை கடந்த பிப்.20 வெளியிட்டுள்ளார் சிபிஎஸ்இ அமைப்பின் செயலர் ஹிமான்ஷு குப்தா. அந்த அறிவிக்கையில்,
`2026-27 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ வாரியத்துடன் இணைப்பு கோரும் பள்ளிகள், அது தொடர்பான இணையதளத்தில் மாநில அரசின் தடையில்லா சான்றிதழுடன் அல்லது தடையில்லா சான்றிதல் இல்லாமலும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய மாற்றம் தொடர்பாக `இணைப்பு துணை விதிகள் 2018-ல்’ திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவ.29-ல் நடைபெற்ற இணைப்பு குழுவின் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டு, சிபிஎஸ்இ ஆட்சிமன்றக் குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் துணை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.