
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நீக்கம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டு வரும் நிலையில், நீக்கப்பட்ட நிர்வாகி நீடிப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் கட்சி இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாமக பொருளாளர் பொறுப்பை திலகபாமாவிடம் இருந்து பறிப்பதாகவும், அவருக்கு பதிலாக சையத் மன்சூரை என்பவரை பொருளாளராக நியமிப்பதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மே 30) காலை அறிவிப்பு வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக, பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமா பொருளாளராக தொடர்வார் என்று பாமக அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், அன்புமணி ராமதாஸின் ஆதரவாளராக அறியப்படும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளரும், மயிலம் எம்.எல்.ஏ.வுமான சிவகுமாரை கட்சியில் இருந்து நீக்குவதாகவும், அவருக்கு மாற்றாக புகழேந்தி என்பவரை புதிய மாவட்டச் செயலாளராக நியமிப்பதாகவும் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கிடையே சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் இன்று (மே 30) நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது,
`பாட்டாளி சொந்தங்களுக்கு வணக்கம். பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் தற்போதைய உறுப்பினர்கள் புதுப்பித்தல் பணி சம்மந்தமாக இங்கே ஐந்து மாவட்டங்களின் செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் ஒன்றிய, பேரூர், நகர நிர்வாகிகள் சகிதமாக கூடியிருக்கின்றோம்.
இது ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு. இந்த வேலைகளில் நீங்கள் எல்லோரும் வேகமாக ஈடுபடவேண்டும்; விரைவில் முடிக்கவேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான் என்று சொல்லமாட்டேன், நாம் என்றுதான் சொல்லவேண்டும்.
பாமக என்றால் அது நானோ, இவர்களோ அல்ல, அது நீங்கள் அனைவரும்தான். நீங்கள் இல்லை என்றால் கட்சியே கிடையாது. இது என் சொத்தோ, பாலு சொத்தோ, வேறு யாருடைய சொத்தோ கிடையாது. இது உங்கள் சொத்து. பொதுக்குழுவில் நீங்கள் என்னை முறையாக தேர்வு செய்தீர்கள்.
என்னுடைய கடமையாக, உங்களுடன் இணைந்து ஒரு அடிமட்டத் தொண்டனாக நான் செயல்படுவேன். பொறுப்புகள் வரும், போகும். ஆனால் உங்களுடைய அன்பும், பாசமும் நிரந்தரம். அது என்றைக்கும் போகாது. அந்த வகையில் இன்று, நாளை, நாளை மறுநாள் தொடர்ந்து மாநில, மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கட்சியை பலப்படுத்த ஆலோசனை மேற்கொள்கிறோம்.
நம்முடைய இனமான காவலர், சமூக நீதி போராளி, மருத்துவர் அய்யா நமது கட்சியைத் தொடங்கினார். அவரது கொள்கைகள், வழிகாட்டுதல்கள், சமூக நீதி-சமத்துவ சிந்தனைகள் ஆகியவற்றை மனதில் நிறுத்தி, அந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த நாம் களத்தில் வேகமாக இறங்குவோம்.
உங்களில் ஒருவனாக, முதல் தொண்டனாக, உங்களுடன் சேர்ந்து நானும் இறங்குவேன்’ என்றார்.