
மயிலாடுதுறை அருகே சாராய வியாபார விவகாரம் தொடர்பாக 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், உடலை வாங்க மறுப்பு தெரிவித்து கொலையானவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
மயிலாடுதுறைக்கு அருகே உள்ள முட்டம் கிராமத்தில் ராஜ்குமாரும், அவரது உறவினர்களான மூவேந்தன் மற்றும் தங்கதுரை ஆகியோரும் இணைந்து சாராய விற்பனையில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. சாராய விற்பனையை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் மீது இவர்கள் தாக்குதல் நடத்துவதுடன், கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில், இவர்களின் சாராய வியாபாரத்தை தட்டிக் கேட்ட அந்த பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரை நேற்று (பிப்.14) இரவு இவர்கள் மூவரும் கத்தியால் குத்திவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்கள். இதனால் சம்பவத்தில் இடத்திலேயே ஹரிஷ் பலியாகியுள்ளார்.
மற்றொருவரான ஹரி சக்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இருவரது உடல்களும் மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கொலையான இளைஞர்களின் உறவினர்கள், அரசு மருத்துமனைக்கு முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக காவல்துறையினர் இருப்பதாக குற்றச்சாட்டிய அவர்கள், உயிரிழந்தவர்களின் உடலுக்கு அரசு நிதியுதவி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். இதற்கிடையே கொலையில் ஈடுபட்ட மூவரையும் காவல்துறை கைது செய்தது.
அதன்பிறகு இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், சாராய விற்பனை காரணமாக இரு இளைஞர்கள் கொல்லப்படவில்லை என்றும், முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட வாய்தகராறு காரணமாகவே இருவரும் கொலையானதாகவும் கூறப்பட்டிருந்தது. கொலை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பவேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், காவல்துறையினரின் அறிக்கையைக் கண்டித்து, இளைஞர்களின் உடல்களை வாங்க மறுத்து அவர்களின் உறவினர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.