திமுக அமைச்சர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவு

சொத்துகுவிப்பு வழக்குகளில் இருந்து கடந்த 2022-ல் தங்கம் தென்னரசுவும், ஜூன் 2023-ல் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனும் விடுவிக்கப்பட்டனர்
திமுக அமைச்சர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவு
1 min read

திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்துகுவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2011-ல் தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகளில் திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த கிழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்துள்ளார் ஆனந்த் வெங்கடேஷ்.

கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் தங்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011-ல் சொத்துகுவிப்பு வழக்குகள் தொடரப்பட்டது.

10 வருடங்களுக்கும் மேலாக நடந்து வந்த இந்த சொத்துகுவிப்பு வழக்குகளில் இருந்து கடந்த 2022-ல் தங்கம் தென்னரசுவும், ஜூன் 2023-ல் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனும் விடுவிக்கப்பட்டனர்.

சொத்துகுவிப்பு வழக்குகளில் இருந்து திமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் குறித்துத் தாமாக முன்வந்து கடந்த வருடம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இதைத் தொடர்ந்து, இவர்கள் இருவர் மீதான சொத்துகுவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க இன்று (ஆகஸ்ட் 7) உத்தரவிட்டுள்ளார் ஆனந்த் வெங்கடேஷ்.

இந்த வழக்குகளில் குற்றச்சாட்டுகளை மீண்டும் பதிவு செய்து, சாட்சிகளுக்கான விசாரணையைத் தொடங்க, எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் வரும் ஆகஸ்ட் 9-ல் தொடங்கும் வழக்குகளின் விசாரணைக்கு தேவைப்படும்போது அமைச்சர்கள் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும், தினசரி விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in