
திருநெல்வேலியில் ஓரிரு இடங்களில் இன்று (டிசம்பர் 13) மிகக் கனமழை முதல் அதி மிகக் கனமழை (சிவப்பு நிற எச்சரிக்கை) பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரு நாள்களாகத் தொடர் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களில் ஏறத்தாழ நேற்று மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை ஓய்ந்த நிலையில், தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை அதிகரித்தால், தாமிரபரணிக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும். எனவே, தாமிரபரணி ஆற்றில் வெளியேறும் நீரின் அளவானது மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், திருநெல்வேலியில் இன்று மிகக் கனமழை முதல் அதி மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 13 காலை 8.30 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் திருநெல்வேலியின் ஊத்துப் பகுதியில் 540 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதுதவிர 8 பகுதிகளில் 300 மி.மீ.-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. ஆக மொத்தம் 29 இடங்களில் 200 மி.மீ.-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாகவும் இது மேற்கு - வடமேற்குத் திசையில் தமிழகக் கடல் பகுதிகளை நோக்கி நகரும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.