
கோவை, நீலகிரியில் இன்று அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சியில் கடந்த இரு நாள்களாக அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இன்று (டிசம்பர் 2) கோவை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அதிகனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். ஒகேனக்கல், சிறுவானி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மற்ற அணைகள் இருக்குமிடங்களும் இதில் அடக்கம். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் இன்று காலை அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், நீலகிரி மற்றும் கோவையில் (மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்) இன்று அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரிக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தெரிவித்துள்ளார்.