மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை மேலும் வலுப்பெற்றது. நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. சென்னையிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது வடக்கு - வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகரும். தமிழகக் கடற்கரையை நோக்கி மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 27 அன்று இது புயலாக வலுப்பெற்று தமிழகக் கடற்கரையை நோக்கி நகரவுள்ளது. எந்த இடத்தில் கரையைக் கடக்கும் என்பது உறுதிபடத் தெரியவில்லை.
இந்தப் புயலுக்கு ஃபெங்கல் எனப் பெயர் சூட்டப்படவுள்ளது. இது சௌதி அரேபியாவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமா, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் இன்று முதல் மழை ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (நவ. 26) ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை (நவ. 27) கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் ஒரு சில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாள்களுக்கு (நவ. 26 முதல் நவ. 28 வரை) மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.