
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய மெட்ரோ ரயில் நிலையங்களில் நேரடியாகச் சென்று டிக்கெட் பெறலாம். டிஜிட்டல் முறையில் டிக்கெட் பெறலாம். அல்லது சென்னை மெட்ரோ ரயில் அட்டை மூலமாகவும் பயணிக்கலாம். இந்த சென்னை மெட்ரோ ரயில் அட்டையானது கடந்த 2015 முதல் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.
சென்னை மெட்ரோ ரயில் அட்டையில் முன்கூட்டியே பணத்தைச் செலுத்திவிட்டு, அதைப் பயணத்தின்போது பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்குத் தள்ளுபடி உண்டு.
கடந்த ஏப்ரல் 14, 2023-ல் சிங்கார சென்னை தேசிய பொதுப்போக்குவரத்து அட்டையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்தப் புதிய சிங்கார சென்னை அட்டையை மாநகரப் பேருந்துகளிலும் பயன்படுத்தும் முறை கடந்த ஜனவரி 6-ல் நடைமுறைக்கு வந்தது.
பழைய சென்னை மெட்ரோ ரயில் அட்டையை முழுவதுமாக முடிவுக்குக்குக் கொண்டு வருவதே புதிய அட்டையை அறிமுகம் செய்ததன் நோக்கம். இதன்மூலம், வரும் ஆகஸ்ட் 1 முதல் பழைய அட்டைக்கு ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழைய மெட்ரோ அட்டையை வைத்துள்ளவர்கள், இருப்புத் தொகை காலியாகும் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். ரூ. 50-க்கு கீழ் குறையும்போது, பயணிகள் தங்களுடைய பழைய அட்டையை மெட்ரோ நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இருப்புத் தொகை மீதமிருக்கும் பட்சத்தில், அந்தத் தொகை புதிய சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றப்படும். பழைய அட்டையைச் சமர்ப்பித்து புதிய சிங்கார அட்டையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம்.
பழையை அட்டைக்கு ரீசார்ஜ் செய்யும் முறை மட்டுமே ஆகஸ்ட் 1 முதல் நிறுத்தப்படுகிறது. மற்றபடி, மாற்று வழிகளில் டிக்கெட் பெறும் முறையில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Metro Rail | CMRL Card | Singara Chennai Card