
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான புறநகர் ரயில் சேவை வரும் மார்ச் 9-ல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை கடற்கரை – கோடம்பாக்கம் இடையிலான வழித்தடத்தில் வரும் மார்ச் 9-ல் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், வரும் மார்ச் 9 ஞாயிறு அன்று காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் வரையிலான இருவழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, கோடம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் வரையிலான இருவழித்தடத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ஆகிய இடங்களுக்கு செல்லும் புறநகர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், ஞாயிறு அன்று மாலை 4.10 மணி முதல், சென்னை கடற்கரை – தாம்பரம் இருவழித்தடத்தில் வழக்கமான ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.