
அதிமுக தொடங்கப்பட்டு 53-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தின் சுருக்கம் பின்வருமாறு:
`கழகம் தொடங்கிய காலம் தொட்டு மக்கள் பணியில் கண் துஞ்சாது கடமையாற்றிய 30 ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியில் சமூக நீதி மலர்ந்தது, மக்கள் வாழ்வு உயர்ந்தது, மக்களின் கவலைகள் மறைந்தன. அம்மாவின் மறைவுக்குப் பிறகு பதவி சுகம் அனுபவித்துக்கொண்டு கழகத்தை அழிக்கத் துடித்தவர்கள் இயக்கத்தைக் காட்டிக்கொடுத்தனர்.
எத்தனையோ சூழ்ச்சிகள் நடைபெற்றன. மனசாட்சியை மறைத்துவிட்டு கபட நாடகம் அரங்கேற்றினார்கள். ஆனால் அவர்களின் சூது பலிக்கவில்லை, சூழ்ச்சிகள் வேலை செய்யவில்லை. அவர்கள் விரித்த வலையிலே அவர்களே மாட்டிக்கொண்டதை நாடறியும். உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்பதில் உறுதியுடன் நிற்போம்.
இன்னும் 1.5 ஆண்டுகளில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வர இருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியை மலரச் செய்வதற்கு, அதிமுகவுக்கு ஆதரவு தர மக்கள் தயாராகிவிட்டார்கள். நமது தோட்டத்தில் களைகள் நீக்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது.
எத்தனை சக்தி எதிர்த்து நின்றாலும், 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது. அதற்கு எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உங்களின் உயர்வுக்காகவும், கழகத்தின் வெற்றிக்காகவும் என்னையே அர்பணித்து உழைத்து வருகிறேன்’ என்றார்.