எந்த விசாரணைக்கும் தயார்: ஜாஃபர் சாதிக் வழக்கு குறித்து இயக்குநர் அமீர்

“என் மீதான குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நான் நிரூபிப்பேன்”.
இயக்குநர் அமீர்
இயக்குநர் அமீர்
1 min read

ஜாஃபர் சாதிக் வழக்கு குறித்த எந்த விசாரணைக்கும் தயார் என இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக் கடந்த மார்ச் 9-ல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். ஜாஃபர் சாதிக் நடத்தி வந்த கும்பல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு 3,500 கிலோ சூடோபெட்ரைன் கடத்தப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஜாஃபர் சாதிக்குக்குத் தமிழ்த் திரைத் துறை மற்றும் பாலிவுட்டில் தொடர்பு இருப்பதாகவும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை ஜாஃபர் சாதிக் தயாரித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இயக்குநர் அமீர் உட்பட மூன்று நபர்கள், ஏப்ரல் 2 அன்று தில்லி அலுவலகத்தில் ஆஜராகும்படி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது.

இதன் பிறகு தில்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரம் மேலாக விசாரணை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள இயக்குநர் அமீரின் அலுவலகத்திலும், ஜாஃபர் சாதிக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் சமீபத்தில் சோதனை செய்தனர்.

இதன் பிறகு இது குறித்து அமீர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது:

“என்சிபி விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். ஜாஃபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்ததால் என்னையும் விசாரிக்கின்றனர், என் மேல் சந்தேகப்படுகின்றனர். ஆனால் குற்றவாளி என மீடியாவில் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே, எந்த விசாரணைக்கும் நான் தயார் என்பதை மீண்டும் மீண்டும் நான் சொல்லி வருகிறேன். என் மீதான குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நான் நிரூபிப்பேன். இறைவன் மிகப் பெரியவன் என்பது தான் என்னிடம் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in