
தமிழகத்திற்கான உரிமைகளை பெற்றுத் தருவதற்காகவே தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷாவை சந்தித்திருப்பதாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி. உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.
தலைநகர் தில்லியில் கடந்த மார்ச் 25 அன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில், இந்த சந்திப்பு தொடர்பாக விளக்கமளித்து ஆர்.பி. உதயகுமார் பேசி வெளியிட்ட காணொளியில் அவர் கூறியதாவது,
`தமிழ்நாட்டின் இரும்பு மனிதர், 8 கோடி தமிழர்களின் ஒரே நம்பிக்கை உலகத் தமிழர்களின் அடையாளம் புரட்சித் தமிழர் அய்யா எடப்பாடி பழனிசாமி, இந்திய தேசத்தின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படுகிற மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரிலே சந்தித்தது இன்றைக்கு இந்திய நாட்டில் கவனத்தை ஈர்த்திருக்கிற தலைப்பு செய்தியாக இருப்பது ஏன் என்று நாம் எண்ணிப்பார்க்கிறோம்.
தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை நயமாகவும், பக்குவமாகவும் எடுத்துரைப்பதில் வல்லவர், திறமையானவர் என்று பெயரெடுத்த புரட்சித் தமிழர் அய்யா எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தருவதற்காக அந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.
இன்றைக்கு உலகத்திடம் இருந்து இதை மறைக்க முயற்சிக்கலாம் தமிழகத்தை ஆளும் ஆரசு. ஆனால் உண்மையை ஒரு நாளும் மறைக்க முடியாது’ என்றார்.