மூடப் பழக்கங்களைத் தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார் முதல்வர் மு.க. ஸ்டாலினைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பபாசி ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 16 வரை 10 நாள்களுக்குப் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழாவில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். தொடக்க விழாவின் பகுதியாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கலைஞர்கள் பக்திப் பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்ட பள்ளி மாணவிகள் சாமியாடத் தொடங்கினார்கள். நிறைய மாணவிகள் சாமியாடத் தொடங்கியதால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகளவில் பரவி சர்ச்சையானது.
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இதற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற கலைஞர்கள் பாடிய பாடல்களே ஒலிபரப்பப்பட்டதாகக் கூறிய மாவட்ட நிர்வாகம், இதில் விதிமீறல் ஏதும் இல்லை என விளக்கமளித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ரவிக்குமார் எம்.பி. , மூடப் பழக்கங்களைத் தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் என முதல்வரைக் கேட்டுக்கொண்டார்.
"மூடப் பழக்கங்களைத் தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும்!
ஒரு பாட்டைக் கேட்டு மாணவிகள் சாமி ஆடுகிறார்களென்றால் அது நமது கல்வி முறையின் தோல்வியல்ல , நமது பண்பாட்டின் தோல்வி!
கல்வி என்பது வகுப்பறைகளில் மட்டுமல்ல, வீடுகளிலும், வீதிகளிலும்கூடப் புகட்டப்படுகிறது. அங்கெல்லாம் மூடத்தனம் என்னும் நச்சுப் புகையைப் பரப்பிக்கொண்டு வகுப்பறையில் மட்டும் அறிவியல் என்னும் ஆக்ஸிஜனை செலுத்தினால் நமது இளைய சமுதாயத்தைக் காப்பாற்றவே முடியாது!
பீகார் மாநில அரசு 1999 ஆம் ஆண்டிலும்; மகாராஷ்டிர மாநில அரசு 2013 ஆம் ஆண்டிலும்; கர்நாடக மாநில அரசு 2017 ஆம் ஆண்டிலும் இயற்றியதுபோல மூடப் பழக்கங்களைத் தடைசெய்யும் சட்டம் ஒன்றைத் தமிழ்நாடு அரசும் இயற்ற வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலினைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.