
பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர், ஆனால் அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய்.
தவெகவின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கை தலைவர்களை அறிமுகம் செய்து வைத்து விஜய் பேசியதாவது:
`நம் கொள்கை தலைவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்து இந்த மண்ணுக்கு அங்கீகாரம் வாங்கித் தந்து, அதனால் இந்த மண்ணின் அடையாளமாக மாறிப்போனவர்கள்.
பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர். ஆனால் பெரியார் கூறிய கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப்போவது இல்லை. எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை.
அரசியலில் அண்ணன் தம்பி உறவை அறிமுகப்படுத்திய அறிஞர் அண்ணா கூறியதுபோல ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனால் பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை என பெரியார் கூறிய இந்த அனைத்தையும் நாம் முன்னெடுக்கப் போகிறோம்.
பெரியாருக்கு அடுத்து எங்கள் கொள்கை தலைவர் பச்சைத் தமிழன் பெருந்தலைவர் காமராஜர். மதச்சார்பின்மைக்கும் நேர்மையான நிர்வாக செயல்பாட்டுக்கும் முன்னுதாரணமாக இருப்பதால் அவரை எங்கள் வழிகாட்டுயாக ஏற்கிறோம். அடுத்தது இந்திய துணைக் கண்டத்தின் அரசியல் சாசனத்தை வடிவமைத்த அண்ணல் அம்பேத்கர்.
சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்த நினைப்பவர்கள் இந்தப் பேரைக் கேட்டாலே நடுங்கிப் போய்விடுவார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும் சாதிய ஒடுக்குமுறையையும் நிறுத்தப்போராடும் அந்த மாபெரும் தலைவரையும் எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம்.
பெண்களை கொள்கை தலைவர்களாக ஏற்று களத்துக்கு வரும் முதல் அரசியல் கட்சி தவெக. அதில் முதலாமவர் ஆகப்பெரும் வீராங்கனையாக இந்த மண்ணை கட்டியாண்ட பேரரசி வேலு நாச்சியார். போர்க்களம் புகுந்த ஆணைக் காட்டிலும் வீரமான வேகமான வீரப்புரட்சியாளர் நம் வேலு நாச்சியாளர்.
மற்றொருவர் முன்னேற துடிக்கின்ற சமூகத்தில் பிறந்து இந்த மண் பின்தங்கிவிடக்கூடாது என்பதற்காகவும், அதன் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட அஞ்சலை அம்மாள். சொத்தை இழந்தாலும் சுயநலம் பார்க்காமல் இந்த மண்ணுக்காக இந்திய சுதந்திரப் போராட்ட களத்தில் போராடிய புரட்சிப் பெண்மணிதான் அஞ்சலை அம்மாள்' என்றார்.