சிறுமி வன்கொடுமை வழக்கு: சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை | Dashwant |

மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையில் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்...
சிறுமி வன்கொடுமை வழக்கு: சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை | Dashwant |
1 min read

சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தஷ்வந்துக்குப் பிறப்பிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017-ல் சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றதாக தஷ்வந்த் என்ற இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், 90 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் தனது தாயார் சரளாவை அடித்துக் கொலை செய்து 25 சவரன் மதிப்புள்ள தங்க நகைகளைப் பறித்துச் சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. நகைகளுடன் தப்பிச் சென்ற தஷ்வந்தைத் தமிழகக் காவல் துறையினர் மும்பையில் வைத்துக் கைது செய்தார்கள்.

அவர் காவல் துறையினரிடமிருந்தும் தப்பி, மீண்டும் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால், தாய் சரளாவைக் கொன்ற வழக்கில் அவருடைய தந்தை பிறழ்சாட்சியாக மாறியதையடுத்து, அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே, சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் 2018-ல் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், மகிளா நீதிமன்ற மரண தண்டனை உத்தரவை உறுதி செய்து, தஷ்வந்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

எனினும், கருணை அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் தஷ்வந்த். மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், மரண தண்டனையை நிறுத்தி வைத்திருந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் 8 அன்று இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம்நாத், சஞ்சய் கரோல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,

”தஷ்வந்த் குற்றவாளி என்பதை நிரூபிக்க போதிய சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. சிசிடிவி காட்சியைக் காவல்துறை சேகரிக்கத் தவறிவிட்டது. இதனால் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படை குற்றவாளிக்குச் சாதகமாகியுள்ளது.” என்று தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்தனர். மேலும், வழக்கிலிருந்து தஷ்வந்தை விடுவிக்கவும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, புழல் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in