ஆம்ஸ்ட்ராங் படுகொலையை எதிர்த்து பேரணி: பா. இரஞ்சித் அறிவிப்பு
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை எதிர்த்து ஜூலை 20 அன்று பேரணி மேற்கொள்ள உள்ளதாக இயக்குநர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூன் 5-ல் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அவரது பெரம்பூர் இல்லத்துக்கு வெளியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் பா. இரஞ்சித், அவரது இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டார்.
இதன் பிறகு, ஆம்ஸ்ட்ராங் மரணத்தை முன்வைத்து திமுக அரசுக்கும், சமூக ஊடகங்களில் ஆம்ஸ்ட்ராங் மரணம் குறித்து கருத்துகள் தெரிவித்தவர்களுக்கும் தன் எக்ஸ் பதிவில் சில கேள்விகளை எழுப்பினார் இரஞ்சித்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை எதிர்த்து ஜூலை 20 அன்று பேரணி மேற்கொள்ள உள்ளதாக இயக்குநர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இப்பேரணி ஜூலை 20 அன்று மதியம் 3 மணிக்கு எழும்பூர் ரமடா ஹோட்டலில் தொடங்கி இராஜரத்தினம் அரங்கம் அருகில் நிறைவு பெறவுள்ளது.
இதில் அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.