
ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாகப் பேசிய வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க எழுப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் our temples (நமது கோயில்கள்) என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். அரசியல், கோயில் மற்றும் மதரீதியிலான தன்னுடைய கருத்துகள் தொடர்பான காணொளிகளை அதில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருகிறார் ரங்கராஜன் நரசிம்மன்.
அந்த வகையில், `ஶ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு நடந்த அபச்சாரங்கள்’ என்ற தலைப்பில் பேசிய காணொளியை கடந்த டிச.7-ல் தன் யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார் ரங்கராஜன். அதில் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறான தகவல்களைப் பரப்பிய ரங்கராஜன் நரசிம்மன் மீது நடவடிக்கை எடுக்குமாறு, ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர், ரங்கராஜன் நரசிம்மன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதவி செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கத்திற்குச் சென்ற தனிப்படை காவலர்கள், ரங்கராஜன் நரசிம்மனைக் கைது செய்து சென்னை அழைத்துவந்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ரங்கராஜன் நரசிம்மன். அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி, ரங்கராஜன் நரசிம்மனை 14 நாட்களுக்குப் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.