கோவை மேயர் வேட்பாளர் ரங்கநாயகி: திமுக அறிவிப்பு

மேயர் என்ற முறையில் கல்பனாவின் செயல்பாடுகள் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இதை அடுத்து கடந்த ஜூலை 3-ல் மேயர் பதவியை ராஜினாமா செய்தார் கல்பனா
கோவை மேயர் வேட்பாளர் ரங்கநாயகி: திமுக அறிவிப்பு
1 min read

கோவை மாநகராட்சியின் திமுக வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில், புதிய மேயராக 29-வது வார்டு உறுப்பினர் ரங்கநாயகியைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 2022-ல் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர்களைத் தேர்தெடுக்க உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் அனைத்து மாநகராட்சிகளிலும் அதிக இடங்களைக் கைப்பற்றியது திமுக கூட்டணி. குறிப்பாக கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகளைத் திமுக கூட்டணி கைப்பற்றியது.

தனிப்பட்ட முறையில் திமுகவைச் சேர்ந்த 76 வார்டு உறுப்பினர்கள் தேர்வானார்கள். இதை அடுத்து நடந்த ரகசிய வாக்கெடுப்பில் திமுகவைச் சேர்ந்த 19-வது வார்டு உறுப்பினர் கல்பனா ஆனந்த் குமார் கோவையின் முதல் பெண் மேயராகவும், 92-வது வார்டு உறுப்பினர் வெற்றிச்செல்வன் துணை மேயராகவும் திமுக கூட்டணி வார்டு உறுப்பினர்களால் தேர்தெடுக்கப்பட்டனர்.

ஆனால் பொறுப்பேற்றது முதல் மேயர் கல்பனாவுக்கும், திமுக வார்டு உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவின. மேலும் தனிப்பட்ட முறையில் கல்பனாவின் செயல்பாடுகள் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இதனால் மக்களவைத் தேர்தல் முடிந்ததும் கோவை மேயர் மாற்றப்படுவார்கள் என்ற தகவல் பரவியது.

இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 3-ல் கல்பனா ஆனந்த் குமார் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 5) காலை திமுக அமைச்சர் கே.என். நேரு தலைமையில் திமுக வார்டு உறுப்பினர்கள் கூட்டம் கோவையில் நடந்தது.

இதில் திமுகவை சேர்ந்த கோவை மாநகராட்சியின் 29-வது வார்டு உறுப்பினர் ரங்கநாயகி, நடைபெற இருக்கும் கோவை மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரபூர்வ மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in