பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, பதவி மற்றும் பொறுப்புக்காக தான் வரவில்லை எனப் பேசியுள்ளார்.
அன்புமணி கூட்டிய பாமக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாலை அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
பாமக தலைவர் அன்புமணி பொதுக்குழுவில் பேசியதாவது:
"ராமதாஸின் நாற்காலி நிரந்தரமானது. அவர் எப்போது வேண்டுமானாலும் நாற்காலிக்கு வரலாம். நிச்சயமாக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ராமதாஸ் ஒரு தேசியத் தலைவர், சாதனையாளர், சமூக சீர்திருத்தவாதி. நமக்கெல்லாம் அரசியலைக் கற்றுக்கொடுத்தது, சமூக நீதி குறித்து பாடம் கற்றுக்கொடுத்தது ராமதாஸ் தான்.
ஆனால், இந்த இயக்கத்தை, நம் கட்சியை நிர்வகிக்க ஒரு சூழல் இருக்கிறது. சில செய்திகளை என்னால் வெளியில் சொல்ல முடியாத சூழல் உள்ளது. நான் ரொம்பப் பிடிவாதக்காரன் அல்ல. நான் சொல்வது நாம் எல்லோரும் சேர்ந்து செய்யலாம் என்பது தான். இதுவே 5, 6 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு சூழல் இருந்திருந்தால் நான் யோசிக்கப்போவதே கிடையாது. எனக்கு இந்தப் பதவி, பொறுப்பு எல்லாம் எதுவும் என் மனதில் கிடையாது. பதவி வேண்டும் என்றால் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பே நான் கேட்டு வாங்கியிருப்பேன். எனக்கு அவசியமே இல்லை.
பதவி, பொறுப்புக்காக நான் வரவில்லை. என் நோக்கமே இந்த சமுதாயத்தை அடுத்தக் கட்டத்தைக் கொண்டு செல்ல வேண்டும். சமுதாயத்துக்காக, சமூக நீதிக்காகவே கட்சியைத் தொடங்கினார் ராமதாஸ்.
இன்று ராமதாஸைச் சுற்றியிருக்கிற ஒரு சில சுயநலவாதிகளை என்னவென்று சொல்வது எனத் தெரியவில்லை. அல்லது குள்ளநரிக் கூட்டமா, தீயசக்திகளா என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை. இங்க வந்துள்ள உங்களுடைய மனதில் வலி இருப்பது எனக்குத் தெரியும். என் மனதிலும் நிறைய வலி இருக்கிறது.
ராமதாஸ், இயக்கும், சமுதாயத்துக்காக எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு இருக்கிறேன். இருவரும் சேர்ந்து போட்டால் தானே அது சண்டை. நேற்றுகூட, நீதிமன்றத்திலிருந்து வெளியில் வரும்போது தீர்ப்பு வந்தது. எனக்குச் சுத்தமாக மகிழ்ச்சியில்லை, சந்தோஷம் இல்லை. வருத்தம்தான்.
மனதில் அவ்வளவு வலியோடு தான் அந்தத் தீர்ப்பை நான் எதிர்கொண்டேன். யாரை எதிர்த்து இந்தத் தீர்ப்பு வந்துள்ளது? நமக்குள்ளேயே ஒரு தீர்ப்பா? நமக்கு இது வெற்றியெல்லாம் கிடையாது. இது நம் குடும்பம். நம் கட்சியே நம் குடும்பம்" என்று அன்புமணி பேசினார்.
முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 17 அன்று காலை 10 மணிக்குப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். சென்னை அருகே மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணியளவில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பொதுச்செயலர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டார்கள்.
அன்புமணி கூட்டிய பாமக பொதுக்குழுவுக்குத் தடைகோரி ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது அறையில் ராமதாஸ் மற்றும் அன்புமணியிடம் மட்டும் விசாரணை நடத்தினார். முடிவில், அன்புமணியின் பாமக பொதுக்குழுவுக்குத் தடையில்லை என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம், ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தது.
Anbumani | Anbumani Ramadoss | PMK | Madras High Court | PMK General Body Meeting