பாமகவின் நிறுவனராகவும் தலைவராகவும் ராமதாஸ் செயல்படுவார் என ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாமகவில் நீண்ட நாள்களாகக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இதன் நீட்சியாக இருவரும் போட்டி பொதுக்குழுக் கூட்டங்களை அறிவித்தார்கள். விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 17 அன்று காலை 10 மணிக்குப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை அருகே மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணியளவில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பொதுச்செயலர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டார்கள்.
ஆகஸ்ட் 9 அன்று நடைபெறும் பாமக பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி ராமதாஸால் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கட்சி விதிகளுக்கு முரணாகப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதால், இதற்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அன்புமணியின் பொதுக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்காமல், ராமதாஸ் தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, அன்புமணி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 9 அன்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பாமக பொதுக்குழுக் கூட்டம் கூடியது.
இந்தப் பொதுக்குழுவில் மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாமக நிறுவனராகவும் தலைவராகவும் ராமதாஸ் செயல்படுவார் என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக நிறுவனரின் எழுத்துபூர்வ ஒப்புதல் மற்றும் நிறுவனரின் முன்னிலையிலேயே பொதுக்குழு நடத்தப்பட வேண்டும் என ராமதாஸ் முன்னிலையில் கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 8 பேர் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிக்கையை ஜி.கே. மணி பொதுக்குழுவில் தாக்கல் செய்தார்.
பாமக நிறுவனருக்குத் தகவல் தெரிவிக்காமல், அழைப்பு விடுக்காமல் பொதுக்குழு என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தியது, தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்புக் கருவியைப் பொருத்தியது உள்பட அறிக்கையில் இடம்பெற்றிருந்த மொத்தம் 16 குற்றச்சாட்டுகளை வாசித்தார் ஜி.கே. மணி. இதன்படி, அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழு சார்பில் ஜி.கே. மணி பரிந்துரைத்தார்.
Ramadoss | PMK | Anbumani Ramadoss | PMK General Body Meeting | PMK General Body Meet |