
`என்னை குலசாமி என்று சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள். எங்களுக்கு எல்லாமே அய்யாதான் என்று சொல்லிக்கொண்டே என்னை சிறுமைப்படுத்துகிறார்கள்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று (ஜூன் 12) செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசியதாவது,
`எனக்கும் செயல்தலைவருக்கும் இடையே நடக்கும் பிரச்னைகள் முழுமையாக உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் டிராவில்தான் உள்ளது; இன்னும் முடிவுக்கு வரவில்லை.
நான் தயாராக இருந்தும் அன்புமணி சமாதான பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதன்பின் எனக்குள் உள்ள கோபம் வெளியில் வந்து, நீயா நானா பார்த்துவிடுவோம் என்ற முடிவில் இப்போது செய்தியாளர்களை சந்திக்கிறேன்.
பாட்டாளி சொந்தங்கள் என்னை குலதெய்வமாக நினைக்கிறார்கள். நான் அவர்களை எனது வழிகாட்டிகளாக மதிக்கிறேன். நான் 46 ஆண்டுகள் உருவாக்கி கட்டிக்காத்து காப்பாற்றிய கட்சி. இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா? எனக்கு உரிமை இல்லையா என்று கேட்பதே அவமானமாக உள்ளது.
என்னை எங்கள் குலசாமி என்று சொல்லிக்கொண்டு என் நெஞ்சில் குத்துகின்றார்கள். எங்களுக்கு எல்லாமே அய்யாதான் என்று சொல்லிக்கொண்டு என்னை அதள பாதாளத்தில் தள்ள நினைக்கிறார்கள். அனைத்தும் அய்யாதான் என்று சொல்லிக்கொண்டே என்னை அவமானப்படுத்துகிறார்கள்.
அய்யாவின் புகழை, பெருமையை பேசுவதே எங்கள் நோக்கம் என்று சொல்லிக்கொண்டே சிறுமைப்படுத்துகிறார்கள். அய்யாவின் லட்சியமே எங்கள் லட்சியம் என்று சொல்லிக்கொண்டே என்னையே இலக்காக்கி குறிவைத்துத் தாக்குகின்றனர்.
இதையெல்லாம் நான் உருவாக்கிய சமூக ஊடகப் பிரிவும், வலைதளங்கள் மூலமும் எனக்கு எதிராக செய்கிறார்கள். என் கைவிரல் கொண்டே என் கண்ணைக் குத்திக்கொண்டேன். உயிருள்ள என்னை அனைத்து வகையிலும் உதாசீனம் செய்துவிட்டு என் உருவப்படத்தை வைத்து உற்சவராக்கியுள்ளனர். இது எல்லாமே நாடகம், அதில் ஒவ்வொருவரும் நடிகர்கள்’ என்றார்.