
பாமக பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக அன்புமணி உரிமை கோரினால் முதலில் தங்கள் தரப்பைக் கேட்க வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கு சில மாதங்களாக மோதல் போக்கு நிலவுகிறது. கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இரு தரப்பும் முயன்று வருகின்றன. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன் அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 2026 வரை பாமக தலைவராக அன்புமணி தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து ஆகஸ்ட் 17-ம் தேதி இதை எதிர்த்து ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், அன்புமணி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் கருத்துக்கு எதிராக நடந்துகொண்டது, சமூக ஊடகங்களில் ராமதாஸ் குறித்து அவதூறு பரப்பியது, ராமதாஸ் இருக்கைக்குக் கீழ் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது என்பது உட்பட 16 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இதற்கு இன்றைக்குள் (செப். 10) பதிலளிக்க வேண்டும் என்று ராமதாஸ் கெடு விதித்தார்.
இந்நிலையில், ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பாமகவின் சின்னத்திற்கும் கட்சிப் பெயருக்கும் உரிமை கோரி அன்புமணி வழக்கு தொடர்ந்தால், தங்கள் தரப்பை முதலில் கேட்க வேண்டும். கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Anbumani Ramadoss | Ramadoss | PMK | Paatali Makkal Katchi | TN Politics