பாமகவிலிருந்து அன்புமணியை நீக்கினார் ராமதாஸ்! | Ramadoss | Anbumani | PMK |

இருமுறை நோட்டீஸ் அனுப்பியும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
அன்புமணி - ராமதாஸ் (கோப்புப் படம்)
அன்புமணி - ராமதாஸ் (கோப்புப் படம்)ANI
2 min read

அன்புமணி ராமதாஸை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இருமுறை நோட்டீஸ் அனுப்பியும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான முரண்பாடு நிலவி வருகிறது. இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 17 அன்று காலை 10 மணிக்குப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அன்புமணி சார்பிலும் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ராமதாஸ் பொதுக்குழுவுக்கு முன்பு நடத்தி முடிக்கப்பட்டது.

ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு ஆகஸ்ட் 17 அன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாமகவின் நிறுவனராகவும் தலைவராகவும் ராமதாஸ் தொடர்வார் என்பது முக்கியத் தீர்மானம்.

மேலும், பாமக சார்பில் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடக்கைக் குழு சார்பில் பொதுக்குழுவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ராமதாஸை அவமதித்தது, தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவியைப் பொருத்தியது, ராமதாஸிடம் தகவல் தெரிவிக்காமல் பொதுக்குழு என்ற பெயரில் கூட்டத்தைக் கூட்டியது, ராமதாஸின் நியமனங்கள் அனைத்தும் செல்லும் என மொத்தம் 16 குற்றச்சாட்டுகள் அன்புமணி மீது முன்வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்க ஆகஸ்ட் 31-க்குள் பதிலளிக்க வேண்டும் என அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அன்புமணி இதற்கு எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை. பிறகு, செப்டம்பர் தொடக்கத்தில் ராமதாஸ் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மீண்டும் ஆலோசனை நடத்தியது. இதில் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்க அன்புமணிக்கு செப்டம்பர் 10 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

செப்டம்பர் 10 வரை குற்றச்சாட்டுகள் குறித்து அன்புமணி எந்தப் பதிலையும் அளிக்காததால், அவரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் கூறியதாவது:

"அன்புமணி மீது எழுந்த 16 குற்றச்சாட்டுகளுக்கு எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை. இருமுறை அவகாசம் கொடுத்தும் நேரில் வந்து விளக்கம் அளிக்காதது, அவர் மீது சொல்லப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் அவர் எந்தப் பதிலும் அளிக்காதது நேரில் வந்து விளக்கம் அளிக்காதது என்ற செயல், அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தான் செய்த தவறுகள் என்று ஒப்புக்கொண்டுள்ளார். இந்த அனுமானம் இருப்பதாலும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உண்மையானவையே மற்றும் சரியானவையே என்று முடிவு செய்யப்படுகிறது.

அதனால், கட்சியின் நற்பெயருக்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் இதுநாள் வரை எவரும் செய்யாத ஒரு மிக மோசமான மற்றும் தலைமைக்குக் கட்டுப்படாத தான்தோன்றித்தனமான செயல் மட்டுமின்றி ஒரு அரசியல்வாதி என்ற தகுதியற்றவராகவே அவர் நிரூபித்துள்ளார்.

பாமகவின் அனைத்துத் தரப்பு நிர்வாகிகள், தலைவர்கள், உறுப்பினர்கள் மனம் புண்படும்படியாக நடந்துள்ள இந்தச் செயல் கட்சியை அழிக்க முயற்சிக்கும் ஒரு முயற்சி என்பது தெரிய வருகிறது. எனவே, அன்புமணியை பாமக செயல் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்

கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு அவருடைய நடவடிக்கை மற்றும் போக்கு மிகப்பெரிய குந்தகம் விளைவிக்கும் செயலாக உள்ளதால் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவரை உடனடியாக நீக்குவது என்று முடிவு செய்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இந்த நிமிடம் முதல் அவர் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் அவருடன் எந்தத் தொடர்பும் கட்சி சார்பாக வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அப்படி மீறி வைத்துக் கொண்டால் அவர்கள் மீதும் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்தி இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

இப்படி கட்சி விரோத நடவடிக்கையில் பிற்காலத்தில் எவரேனும் ஈடுபட்டால் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கட்சி தயங்காது என்பதைத் தெரியப்படுத்தவும் கட்சியின் வளர்ச்சி மட்டுமே முக்கியமானது என்பதைக் கருத்தில் கொண்டு செயல் தலைவர் பதவியில் இருந்தவரை நீக்குவது என்று முடிவு செய்து நீக்கப்படுகிறார்" என்றார் ராமதாஸ்.

மேலும், அன்புமணி வேண்டுமானால் தனிக்கட்சியைத் தொடங்கலாம் என்று ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார். அன்புமணி ஆதரவாளர்களை மன்னித்து கட்சியில் இணைத்துக்கொள்ளத் தயார் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Ramadoss | Anbumani Ramadoss | PMK | Pattali Makkal Katchi |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in