
பாமக தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் விரைவில் சந்தித்துப் பேசவிருப்பதாக கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே பிரச்னை நிலவி வருவது வெளிப்படையாக அனைவரும் அறிந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியில் இருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருந்ததால், முரண்பாடு ஏற்பட்டதாகத் தகவல்கள் உண்டு. இருவருக்கும் இடையே பிரச்னை இருப்பதை உறுதிபடுத்தியது டிசம்பரில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டம்.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்ட மேடையில், இளைஞரணித் தலைவர் நியமனத்தை முன்வைத்து ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் வெடித்தது. மேடையிலேயே இருவரும் காரசாரமாக கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள்.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் 10 அன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், "பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகிய நான், நிறுவனர் என்பதோடு பாமக தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணி இனி பாமக செயல் தலைவராக செயல்படுவார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்றார்.
ராமதாஸின் இந்த அறிவிப்புக்கு மௌனம் காத்து வந்த அன்புமணி ராமதாஸ், நேற்று பாமக தொண்டர்களுக்கு மடல் எழுதினார். அதில், "பாமக கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின்படி, பாமக தலைவரைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதனடிப்படையில், 2022-ம் ஆண்டு மே மாதம் 28 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது. எனவே, பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்" என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.
பொதுக்குழுவைக் குறிப்பிட்டு அன்புமணி மடல் வெளியிட்டதைத் தொடர்ந்து, பாமக அவசரப் பொதுக்குழுவைக் கூட்ட ராமதாஸ் திட்டமிட்டு வருவதாகக் கூறப்பட்டது. இதுதொடர்பான செய்திகளும் வரத் தொடங்கின.
இந்நிலையில், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தைலாபுரம் இல்லத்துக்குச் சென்றார். உள்ளே செல்வதற்கு முன்பு பேசிய அவர், "விரைவில் நல்ல செய்தி வரும். எல்லாம் சுமூகமாகச் செல்கிறது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மிக விரைவில் சந்தித்துப் பேசுவார்கள். மாநாடு உள்ளிட்ட பணிகளை இருவரும் சேர்ந்து செய்வார்கள்" என்று கூறினார்.