திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமர்: அமைச்சர் ரகுபதி

"பெரியார், அண்ணா, அம்பேத்கர், கலைஞர், ஸ்டாலின் ஆகியோருக்கு முன்பு எல்லோரும் சமம் என்று சொல்கிற ஒரே நாயகன் ராமன்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன் என்றும், எல்லோரும் சமம் என்று சொல்கிற ஒரே நாயகன் ராமன் என்றும் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன் பெருவிழாவில் பங்கேற்று அமைச்சர் ரகுபதி உரையாற்றினார்.

"எதிர்காலத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும், இருக்க வேண்டும் என்கிற உன்னதமான லட்சியத்தோடு உருவாக்கப்பட்ட காவியம்தான் கம்ப ராமாயணம்.

இது சற்று வித்தியாசமாகதான் இருக்கும். எனினும், இதில் இருக்கக்கூடிய பல நல்ல கருத்துகளை எடுத்துக்கொண்டு போற்றப்பட வேண்டும். வித்தியாசமான ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கும்போதுதான், இது எங்களுடைய திராவிட மாடலுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்கிறது. எனவேதான், ராமனை திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாகக் கொண்டு வருகிறோம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர், தலைவர் கலைஞர் கருணாநிதி, தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு முன்பு திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துச் சென்றிருக்கிற சமூக நீதியின் காவலர், சமத்துவம், சமூக நீதியைப் போதித்து, உலகத்துக்கு எடுத்துச் சொன்னவன், எல்லோரும் சமம் என்று சொல்கிற ஒரே நாயகன் ராமன். இதை யாரும் மறுக்க முடியாது. மறுப்பதற்கான வாய்ப்பும் கிடையாது" என்றார் அமைச்சர் ரகுபதி.

இதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "கம்ப ராமாயணத்தில் ராமனைப் பற்றி சொல்லியிருக்கக் கூடிய கருத்துகள், திராவிட மாடல் ஆட்சியை ஒட்டிய கருத்துகள். திராவிட மாடல் கொள்கையில் கம்பன் எந்தளவுக்கு ஈடுபட்டிருந்தார், உடன்பட்டிருந்தார், சமரசப்பட்டிருந்தார் என்பதைதான் அங்கு நான் குறிப்பிட்டிருந்தேன்" என்று தான் பேசியதற்கு விளக்கமளித்தார். மேலும், "நான் அனைத்துக் கோயில்களுக்கும் செல்லக்கூடிய ஆள்தான். எனவே பிரச்னை கிடையாது. வாய்ப்பு கிடைத்தால் அயோத்திக்கு நிச்சயம் போவேன். அயோத்தியைப் பார்க்க வேண்டும். ஆனால், அங்கு இருப்பது பால ராமர்தான்" என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in