சென்னையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். இந்த விழாவுக்குத் தலைமை தாங்கினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழாவில் ரூ. 100 மதிப்பிலான தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார் மத்திய பாதுகாப்பு அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான ராஜ்நாத் சிங்.
விழாவில் நினைவு நாணயத்தை வெளியிடும் முன்பு வரவேற்புரை ஆற்றிய திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், கலைஞர் கருணாநிதியின் பணிகள் குறித்துப் பேசினார். இதை அடுத்து கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்த காணொளி திரையிடப்பட்டது.
இந்த விழாவுக்கு முன்பு சென்னை மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல். முருகன், திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.
1924-ல் பிறந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3-ல் நிறைவு பெற்றது. கலைஞரின் நூற்றாண்டை ஒட்டி கடந்த ஒரு வருடமாக தமிழக அரசு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது.
மேலும் கடந்த ஜூலை 12-ல் `கலைஞர் மு. கருணாநிதி’ என்ற பெயரில் ரூ. 100 மதிப்பிலான நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட தமிழ்நாடு அரசு முன்வைத்த கோரிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்தது மத்திய நிதியமைச்சகம். இந்நிலையில் நூற்றாண்டு நினைவு நாணயத்தை இன்று (ஆகஸ்ட் 18) வெளியிட்டுள்ளார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.