சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதிலிருந்து அவருடைய உடல்நிலை பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன. சமீபத்திய தகவலாக இவருடைய அடிவயிற்றில் உள்ள ரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டதாகவும் இதற்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன. இவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓய்வில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலில், "அனைத்தும் நலம்" என்று லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரஜினியின் உடல்நிலை பற்றி நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்துக்குப் பிரத்யேக தகவல் அளித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
இதன்படி, "நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை நலமாக உள்ளது. அவருடைய உடல்நிலை குறித்து தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அச்சப்படக்கூடிய வகையில் எதுவும் இல்லை. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மருத்துவப் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், பெரிதளவில் அறுவைச் சிகிச்சை ஏதும் அவருக்குச் செய்யப்படவில்லை. ரஜினியின் உடல்நிலை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகிகளும் மருத்துவத் துறை அதிகாரிகளும் தொடர்பிலிருக்கிறார்கள்" என்று தகவல் அளித்திருக்கிறார் மா. சுப்பிரமணியன்.