
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை ஓட்டி, போயல் கார்டன் வேதா நிலையம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த.
இன்று (பிப்.24) தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளாகும். இதை ஒட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்திற்கு சென்றார் ரஜினிகாந்த். அவரை ஜெ. தீபா வரவேற்றார்.
இதைத் தொடந்து அங்கே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் ரஜினிகாந்த். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
`புரட்சித் தலைவி அம்மாவின் 77-வது பிறந்தநாளை ஒட்டி அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று நான் வந்திருக்கிறேன். நான்காவது முறையாக நான் இங்கே வந்திருக்கிறேன். 1977-ல் அவரைப் பார்ப்பதற்காக முதல்முறையாக இங்கு வந்தேன். நாங்கள் இருவரும் இணைந்து நடிப்பதாக ஒரு திட்டம் இருந்தது.
அதற்காக அவர்களைப் பார்க்க இங்கே வந்திருந்தேன். 2-வது முறையாக ராகவேந்திரா திருமண மண்டபம் திறப்பு விழாவிற்காக அவர்களை அழைக்க வந்திருந்தேன். 3-வது முறையாக என் மகளின் திருமண அழைப்பிதழை வழங்க வந்திருந்தேன். இது 4-வது முறை.
அவர் இப்போது இல்லையென்றாலும், அவரது நினைவு அனைவரது மனதிலும் நிலைத்திருக்கும். அவர் வாழ்ந்த இல்லத்தில் அஞ்சலி செலுத்தி, அவருடனான இனிமையான நினைவுகளுடன் திரும்பிச் செல்கிறேன். அவரது நாமம் எப்போதும் வாழ்க’ என்றார்.