காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்: ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு ரஜினி பதில் | Rajinikanth |

என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி...
ரஜினிகாந்த் (கோப்புப்படம்)
ரஜினிகாந்த் (கோப்புப்படம்)
2 min read

தன்னை விமர்சித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்திற்கு, “காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 12 அன்று தவெக சார்பில் போராட்டம் நடைபெற்றன. அதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ரஜினிகாந்தை விமர்சித்துப் பேசினார். அவர் பேசியதாவது:-

ஆதவ் அர்ஜுனா விமர்சனம்

“தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்குப் பிறகு பிரபலமான நடிகராக ரஜினிகாந்த் வர வேண்டும் என்று நினைத்தார். அரசியலுக்கு வந்து அரசியல் அமைப்புகளை மாற்ற வேண்டும் என்று எண்ணினார். ஆனால், திமுக குடும்பம் பல மிரட்டல்களைக் கொடுத்து, அவர் அரசியல் கட்சி தொடங்காதபடி பார்த்துக் கொண்டது. இன்றைக்கு அவர் அதே குடும்பத்தின் ரெட் ஜெயிண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். அவர் மீது விமர்சனம் வைக்கவில்லை. ஆனால் அந்த மன வலிமை விஜயிடம் இருக்கிறது” என்று பேசினார்.

ஆதவ் அர்ஜுனாவுக்குக் கண்டனம்

ஆதவ் அர்ஜுனாவின் இந்த விமர்சனத்திற்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக எக்ஸ் பதிவை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ரஜினிகாந்த் குறித்து தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது. அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல்”என்று கண்டித்திருந்தார். அதேபோல், பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட பலர் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

ரஜினிகாந்த் பதில்

இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு ரஜினி தனது பதில் கருத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

”தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் ரகுபதி, திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜூனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Rajinikanth has responded to the comments made by TVK Campaingn Management general secretary Aadhav Arjuna

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in