
ரஜினிகாந்த் திரையுலக சூப்பர் ஸ்டார். நான் அரசியல் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் இணைந்ததால் பயந்துவிட்டனர்' என சமீபத்தில் ரஜினியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது குறித்துப் பேசியுள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
மாவீரர் தினத்தை ஒட்டி மதுராந்தகத்தில் நேற்று (நவ.27) நடந்த நாதக பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியவை பின்வருமாறு,
`காங்கிரஸ் என் இனத்தின் வரலாற்றுப் பகைவன். பாஜக மனித குலத்துக்குப் பகைவன். காவியைப் போட்டு என்னை சங்கியாக்கப் பார்க்கிறார்கள். என்ன உடை போட்டாலும் எனக்கு நன்றாக இருக்கும். ஆனால் காவி உடை எனக்குச் சரிப்பட்டுவராது. இட்ஸ் வெரி பேட், இட்ஸ் வெரி அக்ளி, ஐ ஹேட் இட். நானும் அய்யா ரஜினிகாந்தும் பேசியது, எனக்கும் என் தலைவனுக்கும் நடந்ததைப்போல, அது எங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்.
எங்களைச் சுற்றி பாதுகாப்புக்கு நின்ற சில போராளிகளுக்குத் தெரியும். மிக நெருக்கமான தளபதிகளுக்குத் தெரியும். சிலரால் பேச முடியாத சூழல், சிலர் இப்போது (உயிருடன்) இல்லை. ஆனால் அங்கே என்ன நடந்திருக்கும் என்று யூகத்தின்பேரில் பிறர் பேசுகிறார்கள். தற்போது நானும், அய்யா ரஜினிகாந்தும் இரண்டேகால் மணி நேரமாக என்ன பேசினோம் என்று எங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்.
அதைக் கூறவேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை. நாங்கள் இருவரும் பேசியதால் மட்டுமே சங்கி ஆகிவிட்டோம் என்றால், அவரை வைத்து வருடத்திற்கு இரண்டு படங்களை எடுத்துக் கோடி கோடியாக சம்பாதிக்கும் நீங்கள் யார்? உங்களுக்குப் பெயர் என்ன? உங்கள் இல்லத்தில் காது குத்து, திருமணம், புத்தக வெளியீடு என அனைத்திற்கும் அவரை அழைத்து உடன் வைத்துக்கொள்வீர்கள்.
ஒரு முறை மட்டும்தான் அவருடன் பேசியிருக்கிறேன். ஒரே ஒரு முறை பேசியதற்கே அய்யோ அம்மா என்று கூப்பாடு போடுகிறார்கள். ஏன் தெரியுமா? அவர் திரையுலக சூப்பர் ஸ்டார். நான் அரசியல் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் இணைந்ததால் பயந்துவிட்டனர்’ என்றார்.