தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநர் தரப்பு, டிடி தமிழ் விளக்கம்

தமிழையோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை என..
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

ஹிந்தி மாதம் நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியதில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக ஆளுநர் தரப்பு மற்றும் டிடி தமிழ் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் (தூர்தர்ஷன் தமிழ்) பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ஹிந்தி மாதம் நிறைவு விழா கொண்டாட்டங்களும் நடைபெற்றன. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி தொடக்கத்தின்போது தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்கள் பாடப்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது, 'தெக்கணும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடு' என்ற வரிகள் தவிர்க்கப்பட்டன.

ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் திராவிடம் என்ற சொல் இடம்பெற்றுள்ள வரிகள் தவிர்க்கப்பட்டது அரசியல் களத்தில் சர்ச்சையை உண்டாக்கியது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்குக் கண்டனம் தெரிவித்து ஆளுநர் ஆர்.என். ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிலையில், ஆளுநரின் ஊடக ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் கொடுத்துள்ளார்.

"தூர்தர்ஷனால் சென்னை சேப்பாக்கத்தில் நடத்தப்பட்ட தூர்தர்ஷன் தமிழ் பொன்விழா கொண்டாட்டங்கள் மற்றும் ஹிந்தி மாதம் நிறைவு விழாவில் ஆளுநர் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. பாடலைப் பாடிய குழுவினர் 'திராவிட' என்ற சொல் இடம்பெற்றுள்ள ஒரு வரியைக் கவனக்குறைவாகத் தவறவிட்டார்கள். இது உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக விவரம் சேகரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

ஆளுநருக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவிர வேறு எந்தத் தொடர்பும் கிடையாது. தமிழ் மற்றும் தமிழ்நாட்டின் உணர்வுகள் மீது ஆளுநர் மிகுந்த மரியாதையைக் கொண்டிருக்கிறார். இந்த மரியாதையை அவர் தொடர்ந்து நிலைநாட்டுவார்" என்று ஆளுநரின் ஊடக ஆலோசகர் விளக்கமளித்துள்ளார்.

தொடர்ந்து, டிடி தமிழ் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

"டிடி தமிழ் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ஹிந்தி மாதம் நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். நிகழ்ச்சியின்போது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் ஒரு வரி கவனக்குறைவால் தவறவிடப்பட்டது. இது கவனச்சிதறலால் நேர்ந்த ஒன்று. கவனக்குறைவால் நிகழ்ந்த இந்தத் தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்க வேண்டும் என்ற நோக்கம் பாடலைப் பாடியவர்களுக்குக் கிடையாது. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்" என்று டிடி தமிழ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in