
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நவம்பர் 29 அன்று 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30 அன்று சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எங்கு உள்ளது?
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 310 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 410 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 480 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
கரையைக் கடப்பது எப்போது?
இது வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நவம்பர் 30 அன்று காலை காரைக்கால், மாமல்லபுரம் இடையே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகக் கரையைக் கடக்கக் கூடும்.
புயலாக வலுப்பெறுமா?
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை காலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தற்காலிகமாகப் புயலாக வலுப்பெறக் கூடும். இதன் பின்னர், வலுகுறைந்து கரையைக் கடக்கும்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகக் கரையைக் கடக்கக் கூடும்.
கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் என்னவாக இருக்கும்?
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது, பலத்த காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் அவ்வப்போது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
இதனால், எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
இதன் காரணமாக அடுத்த 4 நாள்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்துக்கான மழை எச்சரிக்கை
கனமழை எச்சரிக்கையைப் பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 29-க்கான மழை எச்சரிக்கை
நவம்பர் 29 அன்று டெல்டா மாவட்டங்கள் கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 30-க்கான மழை எச்சரிக்கை
நவம்பர் 30 அன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 1-க்கான மழை எச்சரிக்கை
டிசம்பர் 1 அன்று மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தரைக்காற்று எச்சரிக்கை
இன்று முதல் நாளை மாலை வடதமிழகக் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்றானது மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
நாளை மாலை முதல் நவம்பர் 30 மதியம் வரை வடதமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்றானது மணிக்கு 55 கி.மீ. முதல் 60 கி.மீ. வரையும் அவ்வப்போது 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீனவர்கள் நவம்பர் 30 வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்குப் பருவமழையின் அளவு என்ன?
வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 1 முதல் இன்று வரையான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 350 மி.மீ. இந்தக் காலகட்டத்தின் இயல்பு அளவு 346 மி.மீ. இயல்பை ஒட்டி மழை பெய்துள்ளது.
(வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியவை)