கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 15 முதல் அக்டோபர் 18 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக புதுச்சேரி, வடதமிழகம், தெற்கு ஆந்திரப் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு அறிவுறுத்தல்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் வழங்கிய அறிவுரைகளின் முக்கிய அம்சங்கள்
அக்டோபர் 15 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
அக்டோபர் 15 முதல் அக்டோபர் 18 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்புப் படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும்.
பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் பறக்கும் ரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருள்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
மின் உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாடு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.