
Cuddalore Train - School Van Accident
கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பொய் சொன்னதே காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்வே கேட்டை மூடாமலேயே கேட்டை மூடியதாகக் கூறி பிரைவேட் எண்ணைப் பகிர்ந்திருக்கிறார் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 அன்று ரயில்வே லெவல் கிராசிங் கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியது.
இந்த விபத்தில் பள்ளி வேனில் இருந்த மாணவர்கள் நிமிலேஷ் (12), சாருமதி (16), செழியன் (15) ஆகியோர் உயிரிழந்துள்ளார்கள். நிமிலேஷின் அண்ணன் விஷ்வேஸ் (16), வேன் ஓட்டுநர் சங்கர் (47) படுகாயங்களுடன் உயிர் தப்பினார்கள். விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ரயில் கேட் மூடப்படவில்லை என மாணவர் விஷ்வேஸ் மற்றும் வேன் ஓட்டுநர் சங்கர் தரப்பில் கூறப்பட்டது. ரயில்வே கேட்டை கடக்க கேட் கீப்பர் அனுமதித்தது தவறு என தெற்கு ரயில்வே தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இருந்தபோதிலும், ரயில்வே நிதியில் சுரங்கப் பாலம் அமைக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒப்புதல் வழங்கப்படவில்லை என தெற்கு ரயில்வே சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. சிதம்பரம் ரயில்வே காவல் துறையினரால் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த தெற்கு ரயில்வே சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து நேர்ந்தபோது, ரயில் கேட் திறந்திருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாக தி ஹிந்து வெளியிட்ட செய்தியில், கேட்கீப்பர் பங்கஜ் சர்மா ரயில்வே கேட்டை மூடியதாக ஆலப்பாக்கம் நிலைய மாஸ்டரிடம் பிரைவேட் எண்ணை பகிர்ந்துள்ளார். விபத்து நிகழ்ந்த பிறகு, நிலைய மாஸ்டரை மீண்டும் அழைத்துள்ள கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, ரயில்வே கேட் மூடப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த உரையாடல் தானியங்கி குரல் பதிவு ஃபோனில் பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த ஜூலை 8, 2025 அன்று கடலூர் ரயில் நிலைய மாஸ்டர் ஆலப்பாக்கம் மாஸ்டரை காலை 7.08-க்கு அழைத்து விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் எண். 56813-ஐ அனுப்ப அனுமதி கோரியிருக்கிறார். ஆலப்பாக்கம் நிலைய மாஸ்டர் இவருடைய வரம்புக்குள் வரும் 4 லெவல் கிராசிங் கேட் கீப்பர்களை அழைத்து கேட்களை மூடுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். பிரைவேட் எண்கள் பகிரப்பட்டது மூலம், கேட் மூடப்பட்டது உறுதி செய்ய பிறகு, ரயில் செல்லலாம் என ஆலப்பாக்கம் நிலைய மாஸ்டர் கடலூர் ரயில் நிலைய மாஸ்டரை அழைத்து ஒப்புதல் அளித்துள்ளார்.
காலை 7.20 மணிக்கு கடலூரிலிருந்து ரயில் புறப்பட்டுள்ளது. 10 நிமிடங்களில் பங்கஜ் சர்மாவிடமிருந்து ஆலப்பாக்கம் நிலைய மாஸ்டருக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது பள்ளி வேன் மீது ரயில் மோதியது பற்றி தெரிவித்துள்ளார். ரயில்வே கேட்டை மூடாமலேயே பிரைவேட் எண்ணைப் பகிர்ந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று தி ஹிந்துவில் செய்தி வெளியாகியுள்ளது.