திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகே நடந்த பாக்மதி விரைவு ரயில் விபத்து தொடர்பாக விசாரிக்க, 10 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அக்.11-ல் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பீஹார் மாநிலம் தர்பாங்காவை நோக்கிச் செல்லும் பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக சென்னை கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி தலைமையில் துறைரீதியிலான விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மிக முக்கியமாக, இந்த ரயில் விபத்து மனிதத் தவறால் ஏற்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதா என்கிற கோணங்களில், விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் கவரைப்பேட்டை ரயில் நிலையத்துக்கு முன்பு, மெயின் லைனிலிருந்து, லூப் லைனுக்கான ரயில் தண்டவாளப் பாதை பிரியும் இடத்தில், போல்ட் மற்றும் நட்டுகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை அடுத்து சம்பவ இடத்தில் ஒரே நாளில் இருமுறை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் வெளியாகும் எனவும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் சன் நியூஸ் தொலைக்காட்சிக்குத் தகவல் அளித்துள்ளார்.
இந்த ரயில் விபத்து தொடர்பாக, கவரைப்பேட்டை ரயில் நிலைய மேலாளர் முனி பிரசாத் பாபு, ரயில் லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட், மோட்டார் மேன், கவரைப்பேட்டை கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரி, இரண்டு சிக்னல்களின் ஆப்பரேட்டர்கள் உள்ளிட்ட 16 ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதை அடுத்து இன்று (அக்.14) காலை நடைபெறும் துறைரீதியிலான விசாரணைக்கு ஆஜராக மேலும் 10 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.