சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் காவல் துறையினர் சோதனை

சவுக்கு சங்கர் போதைப் பொருள் வைத்திருந்ததாக தேனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் காவல் துறையினர் சோதனை
சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் காவல் துறையினர் சோதனை

சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகத்தில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பெண் காவல் அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் தேனியில் மே 4 அன்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு கோவை அழைத்துச் செல்லும் வகையில் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் சவுக்கு சங்கர் மற்றும் காவல் துறையினர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

தாராபுரத்தில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட, பிறகு அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார்.

கோவையில் சிறையில் வைத்து காவல் துறையினரால் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு சிறைத் துறை சார்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது குறித்து நீதித் துறை விசாரணை நடத்த வேண்டும், அவருக்குத் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என அவரது தாயார் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கருக்கு சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்பேரில் அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே சவுக்கு சங்கர் போதைப் பொருள் வைத்திருந்ததாக தேனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போதைப் பொருள் வியாபாரிகளுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது? சவுக்கு சங்கர் போதைப் பொருள் விற்பனை செய்தாரா? என்பதை அறிய சென்னையில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in