நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் தொர்புடைய இடங்களில் நேற்றிரவு சோதனை நடத்தப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில், மயிலாப்பூர் சாசுவதா நிதி நிறுவனம் 150 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கடந்த 2017 முதல் இதன் நிர்வாக இயக்குநராக தேவநாதன் நிர்வகித்து வருகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த இவர், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இவருடைய நிதி நிறுவனத்தில் ஆண்டுக்கு 8% முதல் 12% வரை வட்டி தருவதாகக் கூறி மோசடி நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக நிர்வாக இயக்குநர் தேவநாதன் உள்பட இயக்குநர்களுக்கு எதிராக கடந்த 12 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 13 அன்று தேவநாதன் புதுக்கோட்டையில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இவரை ஆகஸ்ட் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேவநாதன் மற்றும் இவருக்குத் தொடர்புடைய 12 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் ரூ. 4 லட்சம், 2 கார்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேவநாதனுக்குச் சொந்தமான தனியார் தொலைக்காட்சிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.