சென்னையில் விளம்பரப் பலகைகளை அகற்ற உத்தரவு: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

இதுவரை மொத்தம் 460 விளம்பரப் பலகைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது.
ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

மும்பையில் புழுதிப் புயலால் விளம்பரப் பலகை விழுந்து 16 பேர் உயிரிழந்த நிலையில், சென்னையில் விளம்பரப் பலகைகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

மும்பையில் மே 13 அன்று ஏற்பட்ட புழுதிப் புயலின் தாக்கத்தின் காரணமாக காட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு எதிராக இருந்த சுமார் 100 அடிக்கும் மேலான விளம்பரப் பலகை பெட்ரோல் பங்க் மீது சரிந்தது. அந்த பகுதியில் இருந்த ஏராளமான மக்கள் இதில் சிக்கினர். இதில் 16 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் சென்னைக்குள் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அவர் பேசியதாவது:

“சென்னைக்குள் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. மும்பை புழுதி புயல் சம்பவத்துக்கு பிறகு அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 460 விளம்பரப் பலகைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. சாலையோரம், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்படும். உரிய அனுமதி பெற இதுவரை 1100 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளையும், பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளையும் அகற்ற கோரி அறிவுறுத்தி உள்ளோம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in