
1994 இந்திய விமான நிலைய ஆணைய சட்டத்தின் கீழ், திரையரங்குகளை நடத்துவது அனுமதிக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்ற நிலைப்பாட்டை இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) எடுத்துள்ளது.
இதனால், சென்னை விமான நிலைய வளாகத்தில் பல நிலை வாகன நிறுத்துமிடத்துடன் அமைந்துள்ள கட்டடத்தில் இயங்கும், ஐந்து திரைகளைக் கொண்ட ஏரோஹப் பிவிஆர் ஐனாக்ஸ் திரையரங்கம் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறது.
ஒலிம்பியா டெக்பார்க் (சென்னை) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்ற பிறகு, `மீனம்பாக்கம் ரியால்டி பிரைவேட் லிமிடெட்’ என்கிற நிறுவனம் உருவாக்கப்பட்டது.
சென்னை விமான நிலைய வளாகத்தில் திரையரங்கத்துடன் கூடிய வணிக வளாகத்தை கட்டமைத்து 15 வருட காலத்திற்கு அதை இயக்கும் வகையில் அந்த புதிய நிறுவனம் 2018-ல் இந்திய விமான நிலைய ஆணையத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன்பிறகு வணிக வளாகம் கட்டுவதற்காக டிசம்பர் 2018-ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்திடம் இருந்து இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று பெற்றது.
2019 மற்றும் 2021-ல் அங்கீகரிக்கப்பட்ட வணிக வளாகத்தின் கட்டுமானத் திட்ட அறிக்கைகளில் அங்கு திரையரங்கம் இடம்பெறுவது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதற்காக சென்னை பெரு நகர காவல் ஆணையரகத்திடம் இருந்தும் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது.
அதன்பிறகு 13.5 ஆண்டுகளுக்குப் பெறப்பட்ட துணை உரிமத்தின் அடிப்படையில் பிப்ரவரி 1, 2023 முதல் ஏரோஹப் பிவிஆர் ஐனாக்ஸ் திரையரங்கத்தில் படம் திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 1994 சட்டத்தின்படி விமான நிலைய வளாகத்தில் திரையரங்குகள் செயல்பட அனுமதி இல்லாததால் பிவிஆர் ஐனாக்ஸ் திரையரங்கத்தை மூடுமாறு கடந்த 21 ஜூலை 2023 அன்று மீனம்பாக்கம் ரியால்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
இதைத் தொடர்ந்து, தில்லி உயர் நீதிமன்றத்தை அணுகிய மீனம்பாக்கம் ரியால்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்த விவகாரத்தில் இடைக்கால தடை பெற்றது. அதன்பிறகு இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. தற்போது இடைக்காலத் தடை விலக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை அந்நிறுவனம் அணுகியுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த விவகாரத்தில் சுமூக உடன்பாட்டை எட்டும்படி அறிவுறுத்தி, அதுவரை திரையரங்கத்தின் செயல்பாட்டை அனுமதிக்கும்படி இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.