60-70 தொகுதிகளில் தனித்துப் போட்டி: புதிய தமிழகம் கட்சி அதிரடி அறிவிப்பு | Puthiya Tamilagam |

கட்சியின் வலிமைக்கு ஏற்ப எண்ணிக்கையும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் வழங்குவதில் பாரபட்சம்....
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி (கோப்புப்படம்)
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி (கோப்புப்படம்)
2 min read

சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக, கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. பாஜக-வுக்கு 27 தொகுதிகள், பாமக-வுக்கு 18, அமமுக-வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து, தமாகா-வுக்கு 5 தொகுதிகள், ஐஜேகே-வுக்கு 2 தொகுதிகள், புரட்சி பாரதம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டது.

கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி

ஆனால் கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சியுடன் மட்டும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாமல் இழுபறி நீடித்தது. புதிய தமிழகம் கட்சி சார்பில் 15 இடங்களும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். 21 மாவட்டங்களில் 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வலுவாக இருக்கிறது என்று கூறியபோதும் அதிமுக தங்கள் கட்சியைப் புறக்கணித்துவிட்டதாக தெரிவித்தார்.

தனித்துப் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி

இந்நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தனித்துப் போட்டியிடுவதாக கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க மார்ச் மாதம் 21 அன்று மதுரையிலும்; 25, 26 ஆகிய தேதிகளில் கோவையிலும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் & நேர்காணல் கூட்டம் நடைபெற்றது. கடந்த 30 ஆண்டுகள் தென்தமிழகத்தில் தொடர்ச்சியாக, அரசியல் களத்தில் நிலைத்து நின்று, செயல்பட்டு வரும் புதிய தமிழகம் கட்சிக்கு, கூட்டணியில் நமது கட்சியின் வலிமைக்கு ஏற்ப எண்ணிக்கையும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் வழங்குவதில் காட்டப்பட்ட பாரபட்சம் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பேராதரவுடன் இயங்கும் புதிய தமிழகம் கட்சிக்கு உரிய அரசியல் அங்கீகாரம் அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளச் சூழலில், இத்தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் தன்னிகரில்லாத் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் கரத்தை வலுப்படுத்துவதும், நம் மக்கள் ஒன்றுபட்டு நிற்பதும், நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்பதும் மட்டுமே ”உண்மையான அரசியல் வெற்றி” என்பதை நிலைநாட்டும் பொருட்டு, புதிய தமிழகம் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வேட்பாளர் தேர்வு நேர்காணலில் கலந்துகொண்டனர்.

புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ள 120 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள 60 முதல் 70 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு; அத்தொகுதிகளில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களின் பட்டியலை 29 அன்று சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் வெளியிட உள்ளார். எனவே, புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஒன்றுபட்டு நின்று, நம்மை புறக்கணித்தவர்களை, நாம் புறக்கணிப்போம்!” என்று கூறப்பட்டுள்ளது.

Summary

Puthiya Tamilagam Party leader Krishnasamy has announced that the Party will contest the Tamil Nadu assembly elections independently.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in