கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://twitter.com/ptrmadurai

9 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு 13 இடங்கள் கொடுத்துள்ளார்கள்: கருத்துக் கணிப்புகளை சாடிய பிடிஆர்

"யாரோ சொன்ன கட்டளைக்கு ஏற்ப எண்களைக் கொடுத்திருக்கிறார்கள்."

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உண்மையும், ஞானமும் இல்லாத தகவல் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான கடைசிக் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாலை 6.30 மணியளவிலிருந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. பெரும்பாலான முன்னணி நிறுவனங்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என கணித்துள்ளன. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றினாலும், பாஜக 3 இடங்கள் வரை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் இந்தக் கருத்துக் கணிப்புகளைப் புறக்கணித்துள்ளன.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர் கூறியதாவது:

"மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வரவுள்ள நிலையில், இன்று வந்து எனக்குத் தெரியும் என்று சொல்வதெல்லாம் மிகக் குறைந்த தகவலுக்குள்பட்ட கருத்துகளாக நாம் கருத வேண்டும். ஆனால், ஒன்றை மட்டும் நான் சொல்வேன்.

மூன்று மாதங்களாக நடந்த தேர்தலுடைய அனைத்து செய்திகளுக்கும் எதிராக யாரோ அச்சடிச்சு கொடுத்த பத்திரிகை விளம்பரத்தைப்போல தேர்தல் கணிப்புகளை எடுத்த 5, 6 நிறுவனங்கள் ஒரே எண்களைச் சொல்வது எத்தகைய அறிவுசார்ந்த நபருக்கும் நம்ப முடியாதத் தகவலாக இருக்கிறது. இதை எந்த உண்மையும், ஞானமும் இல்லாத தகவலாகக் கருதுகிறேன்.

இந்தக் கணக்கில் 8 இடங்கள் மட்டுமே இருக்கும் இடத்தில் 13 இடங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இங்கு 9 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸுக்கு 13 இடங்களைக் கொடுத்திருக்கிறார்கள். யாரோ சொன்ன கட்டளைக்கு ஏற்ப எண்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த எண்களுக்கும் நாளைய நடக்கவிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மட்டும்தான் என்னால் தெளிவாகச் சொல்ல முடியும். தேசிய அளவில் என்னவென்று தனியாகச் சொல்ல எனக்குத் தனிப்பட்ட கருத்து என்று எதுவும் இல்லை" என்றார் அவர்.

logo
Kizhakku News
kizhakkunews.in