
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் திமுக மேயரின் கணவர் பொன். வசந்த் கைதாகி உள்ள நிலையில், மேயர் இந்திராணியின் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை மாநகராட்சிக்கு கடந்த 2022-ல் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான வார்டுகளை திமுக கைப்பற்றியதை அடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த இந்திராணி மேயராகப் பொறுப்பேற்றார். அவரது கணவர் பொன். வசந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
மதுரை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த தினேஷ்குமார், மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு நடந்ததாக கடந்தாண்டு காவல்துறையின் `சைபர் கிரைம் பிரிவில்’ புகார் செய்தார். ஆனால், ஆணையர் அளித்த புகாரின் மீது பல மாதங்களாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, இந்த சொத்து வரி முறைகேடால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி ஆணையராக சித்ரா பொறுப்பேற்றதும், இந்த சொத்துவரி முறைகேடு வழக்கு வேகம் பெற்றுள்ளது. இந்த முறைகேடு குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணைக்கு ஆணையர் அனுமதி வழங்கியதை அடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு இதில் தொடர்புடைய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சியின் 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் 2 நிலைக்குழுத் தலைவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. இந்த முறைகேடு விவகாரத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய அதிமுகவினர், மேயர் மற்றும் அவரது கணவரை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இந்நிலையில், நேற்று (ஆக. 12) இரவு சென்னையில் வைத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பொன். வசந்தை கைது செய்துள்ளனர். இதனால் இந்திராணியின் மேயர் பதவியைப் பறிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.