சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையின் ஊழியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தால் அதன் உறபத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையை அடுத்து உள்ள ஸ்ரீ பெரும்புதூருக்கு அருகே சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை உள்ளது. இதில் வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சாம்சங் எலக்ட்ரானிக் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், போனஸ் வழங்குதல், 8 மணி நேரப் பணி நிர்ணயம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை கடந்த 5 வருடங்களாக வலியுறுத்தி வந்தனர். ஆனால் இந்தக் கோரிக்கைகளுக்கு சாம்சங் நிர்வாகம் செவிசாய்க்காததால் கடந்த செப்.09-ல் இருந்து காலவரையின்றி வேலை நிறுத்தத்தை அறிவித்து தங்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள் ஊழியர்கள்.
இதனால் சுங்குவார்சத்திரம் தொழிற்சாலையின் 85 சதவீத உற்பத்தி முடங்கியது. இதைத் தொடர்ந்து இருமுறை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தமிழக தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் கமலக்கண்ணன் தலைமையில், சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம், ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் இரண்டு பேச்சுவார்த்தைகளின் முடிவிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து சாம்சங் ஊழியர்களின் போராட்டம் இன்று (செப்.19) 11-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சாம்சங் நிறுவனத்துக்குத் தேவையான உதிரிபாகங்களை ஸ்ரீ பெரும்புதுரைச் சுற்றி உள்ள இருபதுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் வழங்கிவருகின்றன. சாம்சங் நிறுவனத்தின் உற்பத்தி முடங்கியுள்ளதால், இந்தத் தொழிற்சாலைகளின் உற்பத்தியும் முடங்கியுள்ளன.