தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஒரு நாள் வேலைநிறுத்தம் இன்று (செப்.10) தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.
பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, டிட்டோஜேக் என்று அழைக்கப்படும் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, டிட்டோஜேக் போராட்டத்தில் பங்கேற்குமாறு எந்த ஒரு தொடக்கக்கல்வி ஆசிரியரையும் வற்புறுத்தக்கூடாது, மீறினால் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போராட்டக்குழுவுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஊதியம், ஆசிரியர்களின் பதவி உயர்வை தடுக்கும் வகையில் இருக்கும் அரசாணை எண் 243-ன் நீக்கம், ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், என 31 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு வலியுறுத்தியிருக்கிறது டிட்டோஜேக்.
கடந்த ஜூலை 29-ல் இதே 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு வெளியே டிட்டோஜேக் சார்பில் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் பல்வேறு பகுதியில் இருந்த தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.