
திமுக ஆட்சியை ஆன்மிக ஆட்சி என்று கூறுவதில் பெருமை கொள்வதாக பேசியுள்ளார் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 30 இணையர்களுக்கு இன்று (பிப்.14) திருமணம் நடத்தி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். இந்த விழாவில் சேகர்பாபு கூறியதாவது,
`திமுக அரசு அமைந்த பிறகுதான் திருக்கோயில்களில் தூப ஆராதனையுடன், எங்கெங்கும் மணியோசை, எங்கெங்கும் தேவார திரு ஓசையுடன் மகிழ்ச்சியோடு இறையன்பர்கள் இருக்கிறார்கள். எனவே இது ஒரு ஆன்மீக ஆட்சி என்பதில் பெருமை கொள்கிறோம்.
இந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு பல்வேறு வகையில் வியூகங்கள் திரைமறைவிலும், பொதுவெளியிலும் நடந்துகொண்டிருக்கின்றன. மத்தியில் ஆளும் அரசுக்கு பி டீம்களாக பல்வேறு முனைகளில் இருந்து பல்வேறு அரசியல் கணக்குகளை குருட்டு மதியோடு சிலர் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு புறம் எங்கு திரும்பினாலும், அப்பா என்கிற குரல் எங்கள் முதல்வரை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மறுபுறம், அண்ணா என்கிற குரல் எங்கள் துணை முதல்வரை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்த இரு குரல்களும் ஒன்றிணையும்போது, முதல்வர் கூறியது போல 2026 தேர்தலில் 200 தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
திருமண வீடுகளில் வாழ்த்தும்போது நூறாண்டுகள் வாழ்க என்று கூறுவார்கள். இனி நூறாண்டுகள் வாழ்க என்பதை மாற்றிக்கொண்டு இருநூறு ஆண்டுகள் வாழ்க என்று வாழ்த்துவதுதான் நம் கடமையாக இருக்க வேண்டும்’ என்றார்.