
தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வெளியிடப்படும் பாடநூல்களின் விலையேற்றம் குறித்து அறிக்கை வாயிலாக பதிலளித்துள்ள தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பாட புத்தகங்கள் தயாரிக்கும் செலவுகளை ஈடுகட்டவே பாடநூல்களின் விலை உயர்த்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் தமிழக பாடநூல் கழகத்தால் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதே நேரம், தனியார் பள்ளி மாணவர்களுக்கும், போட்டித் தேர்வர்களுக்கும் பாடநூல்கள் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பாடநூல் கழகத்தால் வெளியிடப்படும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி பாட புத்தகங்களின் விலை ரூ. 40 முதல் ரூ. 90 வரை உயர்த்தப்பட்டது. இந்த விலை ஏற்றத்துக்கு தமிழக எதிர்க்கட்சிகளும், தனியார் பள்ளிகளும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தன.
இதை அடுத்து பாடநூல்களின் விலையேற்றத்துக்கான காரணங்களை அறிக்கை வாயிலாக விளக்கியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ். அவரது அறிக்கை பின்வருமாறு:
`பாடநூல்களின் விலையேற்றம் லாப நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்டது அல்ல. அட்டை, காகிதம், அச்சுக் கூலி போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. எனவே பாட புத்தகம் தயாரிக்கும் செலவுகளை ஈடுகட்டவே பாடநூல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளி பாடநூல்களின் விலை 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும். போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு நூலகங்களிலும், அறிவுசார் மையங்களிலும் பள்ளி பாடநூல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன’.