மும்மொழிக் கொள்கையை ஏற்க அழுத்தம்: அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு

அடுத்தாண்டு மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வும், மார்ச் 28-ல் தொடங்கி ஏப்ரல் 15 வரை 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வும் நடைபெறும்.
மும்மொழிக் கொள்கையை ஏற்க அழுத்தம்: அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு
1 min read

10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சென்னையில் இன்று (அக்.14) வெளியிட்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மும்மொழிக் கொள்கைகளை ஏற்க மத்திய அரசு அழுத்தம் தருவதாக குற்றம்சாட்டினார்.

இன்று காலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியவை பின்வருமாறு:

`12-ம் வகுப்புப் பொதுத்தேர்வைப் பொறுத்தவரை அடுத்தாண்டு மார்ச் 3-ல் தொடங்கி மார்ச் 25 வரை நடைபெறும். 11-ம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 5-ல் தொடங்கி மார்ச் 27 வரை நடைபெறும். 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு அடுத்தாண்டு மார்ச் 28-ல் தொடங்கி, ஏப்ரல் 15 வரை நடைபெறும்.

12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படும். 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு மற்றும் 11-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளியிடப்படும்.

பிள்ளைகள் தங்களது கவனத்தைப் படிப்பில் செலுத்தவேண்டும். தடை எதுவாக இருந்தாலும் தமிழக முதல்வர் பார்த்துக்கொள்வார். அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ், முதல் தவணையான ரூ. 573 கோடி நமக்கு இன்னும் வந்துசேரவில்லை. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் என 32,298 நபர்களுக்கு ஊதியம் வழங்க அந்த நிதி தேவைப்படுகிறது.

ஆனால் மத்திய அரசு நிதியை இன்னமும் வழங்காத நேரத்தில், தமிழக முதல்வர் மாநில நிதியின் மூலம் ஊதியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிதி தொடர்பாக மாதம் ஒருமுறை தொடர்ந்து மத்திய அரசு அதிகாரிகளிடம் உரிய முறையில் வலியுறுத்தி வருகிறோம். அந்த முயற்சியை நாங்கள் கைவிடுவதாக இல்லை.

பள்ளிக்கல்வித்துறை சார்ந்து மத்திய அரசு நிர்ணயித்துள்ள 20 அலகுகளில், 18 அலகுகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் இவ்வாறு நன்றாக செயல்படும் மாநிலத்திடம், நீங்கள் இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்?’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in