அரசு முறை பயணமாக இன்று காலை தமிழகம் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
4 நாள் பயணமாக தலைநகர் தில்லி இருந்து விமானத்தில் கிளம்பி இன்று (நவ.27) காலை தமிழகம் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. கோவை விமான நிலையத்தில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தைத் தவிர்த்துவிட்டு, சாலை மார்க்கமாக ஊட்டிக்குக் கிளம்பினார் திரௌபதி முர்மு. அவரது வருகையை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஊட்டி ராஜ் பவனில் இன்று தங்கிவிட்டு, நாளை காலை சாலை மார்க்கமாக பயணித்து குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் திரௌதி முர்மு.
அதன்பிறகு மீண்டும் ராஜ்பவனில் தங்கிவிட்டு, நவ.29-ல் நீலகிரி வாழ் பழங்குடியின மக்கள் மற்றும் படுகர் இன மக்களை சந்தித்துப் பேசுகிறார் திரௌபதி முர்மு. அதற்கு மறுநாளான நவ.30-ல் ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்குச் செல்லும் திரௌபதி முர்மு, அங்கிருந்து முதலில் திருச்சிக்குச் சென்று, பிறகு அங்கிருந்து திருவாரூருக்குச் செல்கிறார்.
திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின்பு, மீண்டும் திருச்சி வந்தடைந்து, திருச்சியில் இருந்து விமானத்தில் தில்லிக்குத் திரும்புகிறார் திரௌபதி முர்மு.