
கிராமப்புற மக்கள் வளர்ச்சிக்கு வங்கிகள் முக்கிய பங்களிப்பு வழங்குகின்றன எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு காலை 11:30 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ”கிராமப்புற மக்கள் வளர்ச்சிக்கு வங்கிகள் முக்கிய பங்களிப்பு வழங்குகின்றன. அவை தொழில்துறைக்கு கடன் வழங்குவதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகுகிறது. இந்தியாவின் பொருளாதாரம் நிலைத்தன்மை உள்ளதாகவும், தொடர் வளர்ச்சியைக் கண்டு வருவதாகவும் உள்ளது” என்று தெரிவித்தார். அதே நிகழ்வில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீத ஆக உயர்ந்துள்ளது. தேசிய வளர்ச்சியை கட்டமைக்க தனியார் வங்கியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் வெளிப்படை தன்மையுடன் நடைபெறும்” என்று பேசினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவர் விருந்தை ஏற்கிறார். அதன் பின்னர் நாளை காலை விமானம் மூலம் திருச்சி செல்ல உள்ளதாக தெரிய வருகிறது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்யவுள்ள குடியரசுத் தலைவர் திரௌமதி முர்மு, அதன் பின்னர், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் சென்று 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இதனையொட்டி, சென்னை, திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காவல்துறையினர் பல அடுக்கு பாதுகாப்பு போட்டுள்ளன.